மின் சைக்கிள் விநியோகத்தில் ஆந்திரா கின்னஸ் சாதனை

மின் சைக்கிள் விநியோகத்தில் ஆந்திரா கின்னஸ் சாதனை

2 mins read
b2ee3113-82a6-4974-b050-f7f8da05bac8
மின் சைக்கிளை ஓட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: தி ஹான்ஸ்

அமராவதி: ஆந்திரா மின் ‘சைக்கிள்’ (E-cycle) விநியோகத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் அம்மாநில முதல்வரிடம் வழங்கப்பட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாம் நாளான சனிக்கிழமை (ஜனவரி 31) பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தனது குப்பம் தொகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரே நாளில் 5,555 மின் சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் முதல்வர் சந்திரபாபுவும் மின் சைக்கிள் பெற்ற பெண்களும் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தூரம் அந்த சைக்கிளை ஓட்டிச் சென்றனர்.

இவ்வாறு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மின் சைக்கிள் விநியோகிக்கப்பட்டதும், அதைப் பெற்ற பயனாளிகள் மூன்று கிலோ மீட்டர் தூரம் அதை ஓட்டிச் சென்றதும் உலக சாதனை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கின்னஸ் புத்தகப் பிரதிநிதிகள் உலகச் சாதனைக்கான சான்றிதழை அவரிடம் அளித்தனர்.

ஆந்திராவில் மக்களைக் காக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு அப்போது குறிப்பிட்டார்.

மூத்த குடிமகன்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் ஆகியோருக்கு ரூ.4,000 வழங்கப்படுகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.6,000, கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.15,000 என மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தனது குப்பம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தொகையை அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்