கலப்படப் பால்: ஆந்திராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கலப்படப் பால்: ஆந்திராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

2 mins read
6f5c4fd8-799d-4917-85ee-d962f63d6bfd
பால் வணிகர் கணேஷ்வர ராவ் கைதுசெய்யப்பட்டுள்ளார். - படம்: நியூஸ்18

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கலப்படப் பால் குடித்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்மாநிலத்தின் ராஜமுந்திரி அருகே உள்ள நரசபுரம் கிராமத்தில் கணேஸ்வர ராவ் என்பவர் அரசு அங்கீகாரம் இன்றி பால் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கும் அவர் பால் விநியோகம் செய்துவந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி கணேஸ்வர ராவ் விநியோகித்த பாலை அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அடுத்த இரண்டு நாள்களில் சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். வியாழக்கிழமை (பிப்ரவரி 26) இந்த எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது.

கலப்படப் பாலைப் பருகிய 76 வயது முதியவர் உயிரிழந்துவிட்டார். இதுவரை உயிரிழந்த, சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் 60 வயதைக் கடந்தவர்கள்.

பால் வணிகர் கணேஷ்வர ராவ் கைதான நிலையில், தாம் வழக்கம்போல் 46 விவசாயிகளிடம் இருந்து பாலைக் கொள்முதல் செய்து 106 குடும்பங்களுக்கு அதை விநியோகம் செய்ததாகவும் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கலப்படப் பாலை விநியோகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் விநியோகித்த பாலின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில், கால்நடைப் பராமரிப்புத்துறை, நான்கு கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைத்து, 41 பால் மாதிரிகளைச் சேகரித்து, விஜயவாடாவில் உள்ள கால்நடையியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பகுப்பாய்வுக்காக அனுப்பியுள்ளதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்