அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் மோசடி குறித்து நடிகை தமன்னாவும் விசாரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் 2019 முதல் 2024 வரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான விற்பனையில் 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து, அதைக் கண்டுபிடித்து வழக்குத் தொடர்ந்தவர் நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். அது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி பணத்தின் மூலம் நடிகை தமன்னா நடத்திவரும் ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கம் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் நாயுடுவுடன் தனி விமானத்தில் தமன்னா சென்ற படங்கள் இணையத்தில் பரவலாகின. கைதான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியின் உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு. அவருடனான தமன்னாவின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் அனம் வெங்கடரமண ரெட்டி கூறினார்.