ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை: சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை: சந்திரபாபு நாயுடு

2 mins read
45f5937f-8578-406b-892f-5ab348144b7e
13 முதல் 16 வயது வரையான சிறார்களுக்கு இத்தடையை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். - சித்திரிப்புப்படம்: இந்தியா டுடே

அமராவதி: ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

சிறாரைப் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கை அவசியம் என அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பபயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவும் அந்த வழியைப் பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தடைவிதிப்பது தொடர்பான கொள்கை அறிவிப்பு அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்றும் 13 முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு இத்தடையை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

உரிய ஆலோசனைகள், கொள்கை ஆய்வுக்குப் பிறகு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

“சிறார்களிடையே கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு மோசமான விளைவுகளைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய முடிவை அரசு எடுத்துள்ளது,” என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் பாதுகாப்பான இடமாக மாறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு அதனால் விளையும் தீங்குகளின் தாக்கத்தைக் குறைக்கும் என்றும் ஆந்திர தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கூறியிருந்தார்.

குழந்தைகள் கைப்பேசிகளை இடைவிடாமல் பயன்படுத்துவதால், கல்வியில் கவனம் செலுத்தும் நேரம் குறைவதுடன் கல்வியும் பாதிக்கப்படுவதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம், ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா சட்டமன்றத்தில் பேசியபோது, பள்ளி மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை அரசு பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தார்.

விரைவில் அந்தத் தடை அமலுக்கு வரவிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துக்கு வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் நாயுடு சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்