ஆந்திராவில் அதிகாலை விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி

1 mins read
25eed7b3-a79d-47d4-bb49-3fdd7f5cb568
35 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.  - படம்:இந்து தமிழ் திசை

அமராவதி: அதிகாலை வேளையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒன்பது பேர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆந்திராவில் சோகம் நிலவுகிறது.

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இந்தச் சோகச் சம்பவம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நிகழ்ந்தது.

35 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அக்குறிப்பிட்ட தனியார் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காவல்துறையின் உதவியோடு நீண்ட நேரம் போராடி பலரை மீட்டனர். பின்னர் இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், காயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அல்லூரி சீதாராம ராஜு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள், பத்ராசலம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். காயமடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இத்தகவல் தெரியவந்தது.

“அதிகாலை வேளையில் விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலையில் இதுபோன்ற வாகனப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. ஓட்டுநர் சற்றே அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது,” என்று காவல் அதிகாரிகள் கூறினர்.

பேருந்து விபத்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றும் பலர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு உதவி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்