அனகாபல்லி: ஆந்திர மாநிலத்தின் அனகாபல்லி மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலை மேற்கு வங்க மாநிலத்தின் டாடாநகரில் இருந்து எர்ணாகுளம் சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில், இரண்டு ரயில் பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. பயணி ஒருவர் உயிரிழந்தார். எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 1.11 மணி அளவில் டாடாநகர் - எர்ணாகுளம் சந்திப்பு அருகே அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த அந்தப் பயணி விஜயவாடாவைச் சேர்ந்த சந்திரசேகர் சுந்தர் என்பதை காவல் துறை உறுதி செய்துள்ளது.
அதிகாரிகள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரயிலில் தீப்பற்றியதை அறிந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, பயணிகள் அனைவரையும் வெளியேற்றினார். தீப்பற்றிய இரண்டு பெட்டிகளிலும் மொத்தம் 158 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிந்த ரயில் பெட்டிகள் உடனடியாக ரயிலில் இருந்து கழற்றிவிடப்பட்டன. அதையடுத்து தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவுவது தடுக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம், உயிர்ச்சேதம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பிடித்த இரண்டு பெட்டிகளிலும் பயணம் செய்தவர்கள் மாற்று ஏற்பாடு மூலம் எர்ணாகுளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்தையடுத்து அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விசாகப்பட்டினம், விஜயவாடா செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

