பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் திட்டம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

1 mins read
d27c0fac-4aeb-404f-af5d-71019be17549
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திராவில் பெண் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் வகையில், புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை, வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் கைகொடுக்கும் என்றும் இது தொடர்பான புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையைச் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் பணியிடத்தைப் பகிர்ந்து, பயன்படுத்தும் வகையில் (கோ ஒர்கிங் ஸ்பேஸ்) தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களை அமைக்கவும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நிறுவனங்களை ஆந்திர அரசு ஊக்கப்படுத்தும்,” என்றார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், ஆந்திர அரசை வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தகவல் தொழில் நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

இப்புதிய முயற்சி குறித்து லிங்க்ட்இன் பக்கத்தில் அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதில் ஆந்திர அரசு முனைப்பாக உள்ளது.

வீட்டில் இருந்தபடி பணியாற்றுவது பெண் ஊழியர்களின் பங்களிப்பை வெகுவாக அதிகரிக்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்