அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்க்காபுரம் எனும் இடத்திற்கு அருகே தனியார் பேருந்தும் லாரியும் வியாழக்கிழமை (மார்ச் 26) நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மார்ச் 26ஆம் தேதி, தெலுங்கானா மாநிலம் நிர்மல் பகுதியிலிருந்து ஆந்திராவின் நெல்லூர் நோக்கி ‘ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ்’ என்ற தனியார் பேருந்து சென்றது.
காலை 6:30 மணியளவில் ராயவரம் கிராமம் அருகே அப்பேருந்து வந்தபோது, கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி அதனுடன் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் கலன் வெடித்துச் சிதறியது. சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. விபத்து நடந்தபோது பேருந்தில் கிட்டத்தட்ட 40 பயணிகள் இருந்தனர். தூக்கத்திலிருந்த பயணிகள் சுதாரிப்பதற்குள் தீ மளமளவெனப் பரவியதால், பேருந்தின் பின் பகுதியில் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போனது.
13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
காயமடைந்த கிட்டத்தட்ட 20 பேர் மார்க்காபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அவர், விபத்துக் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையிட்டுள்ளார்.

