அமராவதி: ஆந்திர மாநிலத்தில் இருந்து துபாய்க்கு வேலைக்காகச் சென்ற 16 இளையர்கள், அங்கு ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத் தாயகம் கொண்டு வருவதற்கு ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த இளையர்கள் எந்த வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்களோ அந்த வேலை அவர்களுக்கு வழங்கப்படாமல் வேறு வேலை வழங்கப்பட்டது. அதையடுத்து நாடு திரும்ப அந்த இளையர்கள் விரும்பினர். அதற்கு, அந்த துபாய் நிறுவனம் அனுமதிக்கவில்லை.
துபாயில் ஏமாற்றப்பட்ட அந்த 16 இளையர்களும் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தெரிவிக்கும் வகையில் ஒரு காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டு தங்களை உடனடியாக மீட்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர அமைச்சர் அச்சம் நாயுடு ஆகியோர் இவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக நேற்று உறுதி அளித்தனர். மேலும் துபாயில் சிக்கியுள்ள இளைஞர்களிடம் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறினர். அவர்களை விரைவில் மீட்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளும் செய்து வருகிறோம் என்று ஆந்திர அமைச்சர் தெரிவித்தார்.
துபாயில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஆந்திராவின் அனைத்துலக வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உதவியுடன், இளைஞர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆந்திரா அதிகாரிகள் தெரிவித்தனர்.