அமராவதி: முதலீடுகளைப் பெறுவதில் இந்திய மாநிலங்களில் ஆந்திரா முதலிடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் முன்மொழியப்பட்டுள்ள முதலீடுகளில் நான்கில் ஒரு பங்கு முதலீட்டை ஆந்திர மாநிலம் தன் வசப்படுத்தி இருப்பதாக அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் முன்மொழியப்பட்டுள்ள மொத்த முதலீடுகள் குறித்து இந்திய பொருளியல் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ளது.
அவற்றின் அடிப்படையில் பரோடா வங்கி வெளியிட்ட அறிக்கையில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நடப்பாண்டில் நாட்டில் முன்மொழியப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டுத் திட்டங்களில் ஆந்திர மாநிலம் 25.3% முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் ஒடிசா 13%, மகாராஷ்டிரா 12.8% பெற்று இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
மூன்று மாநிலங்களும் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து முதலீடுகளிலும் 51.2%ஐ வசப்படுத்தி உள்ளன.
அதேசமயம் ஒட்டுமொத்த முதலீட்டு அறிவிப்புகள் கடந்த ஆண்டை விட 11.5% அதிகரித்து ரூ.26.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என பரோடா வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த வளர்ச்சி சாத்தியமானதற்கு ஆந்திர மாநிலத்தின் கொள்கை சீர்திருத்தங்களே காரணம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மாநிலத்தின் செயல்திறன், எதிர்கால சீர்திருத்தங்கள், வணிகம் செய்வதற்கான வேகம் ஆகியவற்றின் அறிகுறிதான் இந்த வளர்ச்சி என்றார் அவர்.
இந்நிலையில் மொத்த முதலீட்டு அறிவிப்புகளில் தெலுங்கானா மாநிலம் 9.5%, குஜராத் 7.1% பெற்றுள்ளன. தமிழ்நாடு 4.9%, ராஜஸ்தான் 4.3%, சத்தீஸ்கர் 3.9% பங்களிப்பை வழங்கியுள்ளன.
உத்தரப் பிரதேசம், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. உத்தரப் பிரதேசம் 2.7%, கர்நாடகா 2.1% பங்களிப்பை மட்டுமே பதிவு செய்துள்ளன.
ஒட்டுமொத்த முதலீட்டு அறிவிப்புகளில், ஆண்டுகளுக்கு இடையேயான வளர்ச்சி விகிதம் 11.5% ஆக அதிகரித்து இருப்பது நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம் என்று திரு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மேலும் ஆந்திரப் பிரதேசத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்காக முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் நீண்டகால பொருளியல் வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.

