நியூயார்க்: இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் தமது முன்னாள் காதலர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முன்னாள் காதலர் அர்ஜுன் சர்மா தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா கோடிஷாலா, 27, என்னும் அந்தப் பெண், 2025 பிப்ரவரி முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வந்ததாக ஹோவர்ட் கவுண்டி காவல்துறையினர் கூறினர்.
அந்தப் பெண்ணை புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் இருந்து காணவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
நிகிதாவைக் கண்டுபிடிக்க உதவுங்கள். கொலம்பியா வட்டாரத்தில் இருப்போர் இதற்கு உதவலாம்,” என்று கடந்த வாரம் நிகிதாவின் படத்துடன் வெளியிடப்பட்ட அந்தப் பதிவு ஃபேஸ்புக்கில் அதிகமானோரால் பகிரப்பட்டது.
நிகிதாவின் நண்பர்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புத்தாண்டுக்கு மறுநாள், ஜனவரி 2ஆம் தேதி நிகிதாவை காணவில்லை என்று காவல்துறையில் அர்ஜூன் சர்மா புகார் அளித்த நிலையில், கொலம்பியாவில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, நிகிதா கத்திக்குத்துக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையிடம் புகார் அளித்த நாளிலேயே அர்ஜூன் சர்மா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதைக் காவல்துறை கண்டறிந்தது.
இந்நிலையில், நிகிதா டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை வெளிவரவில்லை.
இந்தியாவுக்கு தப்பிச்சென்ற அர்ஜூன் சர்மாவைச் கைது செய்ய, இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல்துறையின் உதவி நாடப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகத் தேடப்பட்ட நிலையில், அர்ஜூன் சர்மா தமிழ்நாட்டில் சிக்கினார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட விவரம் அமெரிக்கக் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிகிதாவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட இந்தியத் தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

