தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திராவில் அதிர்ச்சிச் சம்பவம்: பெண் திறந்து பார்த்த பார்சலில் ஆண் சடலம்

2 mins read
7dab2716-7641-4ce1-90d9-9148674783e7
ஆண் சடலத்துடன் ரூ.1.30 கோடி பணம் கேட்டு கடிதம் ஒன்றும் இருந்தது. - படம்: இந்திய ஊடகம்

கோதாவரி: வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்ததைக் கண்டு ஆந்திர மாநிலப் பெண் ஒருவர் அதிர்ச்சியில் மூழ்கினார்.

அந்த மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், யண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி நாக துளசி. மாநில அரசு வழங்கிய வீட்டுமனையில் அவர் வீடு கட்டி வருகிறார்.

அந்த இடத்தில் வீடுகட்டிக் கொடுக்க ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்புக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவர்கள் ஏற்கெனவே வீட்டுக்குத் தேவையான பொருள்களைப் போதுமானவரை அனுப்பி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மின்சாரப் பொருள்கள் வேண்டுமென மீண்டும் துளசி, ஷத்ரிய சேவா சமிதிக்கு விண்ணப்பித்திருந்தார்.

அதன் பிறகு வியாழக்கிழமை (டிசம்பர் 19) இரவு துளசிக்கு ஒரு பார்சல் வந்தது. இதில் மின்சாரப் பொருள்கள் இருக்குமென நினைத்து அந்த பார்சலை அவர் திறந்து பார்த்தார்.

அப்போது பாதி வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஓர் ஆணின் உடல் அதில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறையினர் விரைந்து சென்று பார்சலையும் அதனுடன் இருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்தக் கடிதத்தில், ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டும்; இல்லையேல் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டி வரும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இறந்தவருக்குச் சுமார் 45 வயது இருக்கும் என மதிப்பிட்ட காவல்துறையினர், அவர் இறந்து நான்கு நாள்கள் இருக்கலாம் என கருதுகின்றனர்.

அந்த உடலுக்குச் சொந்தமானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யார் அவரை கொலை செய்தது? மீதி உடல் எங்கே? என பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்