தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தால் ஆத்திரம்; 11 வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்திய கும்பல்

2 mins read
0773377e-ebd4-4c2b-9c04-64c02c0d0521
தீவைத்துக் கொளுத்தப்பட்ட வாகனங்களில் பேருந்துகளும் லாரிகளும் அடங்கும். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

சிங்ரோலி: நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து மோட்டார்சைக்கிளை நசுக்கியதில், அதில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ரோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) நேர்ந்தது.

அதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பேருந்துகள், லாரிகள் என குறைந்தது 11 வாகனங்களைத் தீவைத்து எரித்தனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட அமளியில் காவலர் ஒருவர் காயமுற்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர்.

“விபத்தால் ஆத்திரமடைந்த அவர்கள் பேருந்துகளுக்கும் சரக்கு வாகனங்களுக்கும் தீ வைத்ததுடன் அங்கிருந்த தொழிற்சாலைப் பகுதிக்குள்ளும் நுழைய முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியில் வன்முறையைத் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் இறங்கி, வாகனங்களைக் கொளுத்தியோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.

இதனிடையே, நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் காவல்துறைக் கண்காணிப்பாளர் கத்ரி தெரிவித்தார்.

இதற்கிடையே, கும்பமேளாவில் பங்கேற்க பக்தர்களுடன் சென்ற வாகனங்கள் இரு வெவ்வேறு விபத்துகளில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

கும்பமேளாவில் இருந்து பேருந்தில் திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில், நான்கு பேரும், கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் பேருந்து, கார் மோதிய விபத்தில் 11 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்