மும்பை: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் 24 நிறுவனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தின் நிதியை முறைகேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள ‘செபி’, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் அவர் இயக்குநராகவோ முக்கியப் பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்தது.
அதோடு, ‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்துக்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதித்துள்ள செபி, அந்த நிறுவனம் ரூ.6 லட்சம் அபராதமும் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, சொத்துகள், பணப்புழக்கம், நிகர மதிப்பு அல்லது வருவாய் எதுவும் இல்லாத நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்க அனுமதித்திருப்பதாகவும், அதில் நிதி மோசடி நடந்திருப்பதாகவும் ‘செபி’ தனது 222 பக்க இறுதி உத்தரவில் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக ‘செபி’ தெரிவித்தது.
இதனால் ‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனம், தான் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதன் காரணமாக 2018ஆம் ஆண்டு மார்ச்சில் கிட்டத்தட்ட ரூ.59.60ஆக இருந்த ‘ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தின் பங்கு, 2020ஆம் ஆண்டு மார்ச்சில் ரூ. 0.75ஆகச் சரிந்தது.
மோசடியின் அளவு தெளிவாகத் தெரிந்ததும், நிறுவனம் அதன் வளங்களை வெளியேற்றியதுமே இதற்குக் காரணம் என ‘செபி’ கூறியுள்ளது.

