புதுடெல்லி: பணமோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அனில் அம்பானி தனக்குச் சொந்தமான ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்காக ‘யெஸ்’ வங்கியில் 3,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் தொகையை உரிய காரணத்துக்குப் பயன்படுத்தாமல், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அனில் அம்பானி மொத்தம் ரூ.17,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக சிபிஐ புகார் தெரிவித்ததுடன் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்தது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவரது வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அனில் அம்பானியிடம் பலமணி நேரம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த மோசடி வழக்கில் அடுத்தகட்டமாக அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் போலி வங்கி உத்தரவாதம் பெற உதவியதாக, ‘பிஸ்வால் டிரேட்லிங்க்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வால் என்பவர் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.