அனில் அம்பானியின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி

அனில் அம்பானியின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி

1 mins read
6c040471-042c-4082-a4d1-5224f3b46daf
அனில் அம்பானி. - படம்: இந்து தமிழ் திசை

மும்பை: வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள இந்தியத் தொழிலதிபர் அனில் அம்பானியின் சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

திரு அனில் அம்பானி விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான ரூ.3,716 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இந்திய வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன்பெற்று, அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார் என்பது அனில் அம்பானிமீது அமலாக்கத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், யெஸ் வங்கியிடமிருந்து அனில் அம்பானி ரூ.11,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதது தெரியவந்தது. அதில் ஒரு பகுதி பின்னர் வாராக் கடனாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், தமது நிறுவனங்களுக்காக வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை அனில் அம்பானி சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்தது.

மொத்தத்தில், ஏறக்குறைய ரூ.40,000 கோடி கடன்பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டைத் திரு அனில் அம்பானி எதிர்நோக்கியுள்ளார்.

முன்னதாக, ரூ.9,000 கோடி மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. தற்போது மும்பையில் உள்ள அவரது வீட்டையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

பாலி ஹில் பகுதியில் 17 தளங்களுடன், பிரம்மாண்டமாக அமைந்துள்ள அவ்வீட்டின் மதிப்பு ரூ.3,716 கோடியாகும்.

இதையடுத்து, அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அனில் அம்பானி, அவரது நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.15,000 கோடியைக் கடந்துவிட்டது.

இதனிடையே, தன்மீதான வழக்கு விசாரணை முடியும்வரை நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லப்போவதில்லை என அனில் அம்பானி உறுதிமொழி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்