அண்ணா அறிவாலயம், நினைவிடம் முற்றுகை: 700 தூய்மைப் பணியாளர்கள் கைது

2 mins read
3de8bb2f-7ee7-4f79-bd2d-438b7bb59710
பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளுடன் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

முன்னதாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று பின்னர் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதையடுத்து அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த 150 நாள்களுக்கும் மேலாக மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை, தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 27ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி என்ற வகையில் பாரிமுனையில் போராட்டம் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் முயன்றனர்.

இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஏராளமான பணியாளர்கள் திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது சில பெண் பணியாளர்கள் மயக்கமுற்று விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

குறிப்புச் சொற்கள்