தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோட்டல் உரிமையாளரிடம்மன்னிப்புக் கேட்ட அண்ணாமலை

2 mins read
76be7f9b-c0c2-4094-ad35-d55f8ab06e4b
தமிழக பாஜக சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளரும் பேசிக் கொண்ட தனிப்பட்ட உரையாடலை தமிழக பாரதிய ஜனதாவினர் பகிரங்கமாக வெளியிட்ட தற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் காணொளி தற்போது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது.

கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய காணொளி கடந்த இரு நாள்களாக சூடுபிடித்து வருகிறது.

இந்த நிலையில், கேள்வி கேட்ட சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், அந்தக் காணொளியையும் பாரதிய ஜனதா தரப்பினர் வெளியிட்டனர். இந்தக் காணொளி தீயாக சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்புக் கேட்க வைத்ததாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதிப்பிற்குரிய நிதியமைச்சருக்கும் தொழிலதிபருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் காணொளியை பகிர்ந்ததற்காக தமிழக பாஜகவினர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் மதிப்பிற்குரிய சீனிவாசனை தொடர்பு கொண்டு, எதிர்பாராத விதமாக நடந்த தனியுரிமை மீறலுக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“சகோதரர் அன்னபூர்ணா சீனிவாசன், தமிழக வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்று எக்ஸ் ஊடகத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதற்கிடையே லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமதிக்கப்பட்டிருக்கிறார். ஜி.எஸ்.டி., குறித்து கேள்வி கேட்பவரின் பேச்சு ஆணவத்துடன், அவமரியாதையுடன் அணுகப்பட்டுள்ளது என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஜி.எஸ்.டி பிரச்னைகளை தீர்க்கக் கோரியவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியுள்ளது. சிறு, குறு வணிகர்களை ஆணவத்தோடு அவமதிக்கிறது பாஜக அரசு,” என்றும் ராகுல் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்குக்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தொழில் செய்கிற ஒருவர் பலமுனை ஜிஎஸ்டியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியதற்காக அவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பாஜகவின் பாசிச போக்கையே காட்டுகிறது என்றார் அவர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி அன்னபூர்ணா ஹோட்டலின் நிறுவனர் சீனிவாசன் கேள்வி கேட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி அன்னபூர்ணா ஹோட்டலின் நிறுவனர் சீனிவாசன் கேள்வி கேட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்
குறிப்புச் சொற்கள்