சென்னை: தமிழக பாரதிய ஜனதாக் கட்சியில் தலைமைத்துவ மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை நிலவுகையில், அதன் தமிழக மாநிலத் தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிக்க கட்சியின் தேசிய தலைமைத்துவம் விரும்புவதாக ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தளம் குறிப்பிட்டது.
இருந்தபோதும், எதிர்வரும் மாநிலச் சட்டமன்ற தேர்தலுக்காக திரு அண்ணாமலை, அதிமுகவுடன் இணைந்து செயலாற்றவேண்டும் என பாஜக விரும்புவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வரும் தேர்தலுக்கு அதிமுகவுடனான கூட்டணி பாஜகவுக்கு முக்கியம் என்றாலும் அண்ணாமலையை நீக்கிவிட்டு அந்தக் கூட்டணியில் இணைய பாஜக விரும்பவில்லை என்று மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிட்டது. கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடிப்பது அவரது கையில் இருப்பதாக அந்தத் தலைவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, அதிமுகவுடனான கூட்டணி, தேசிய கட்சியான பாஜகவின் நலனுக்கு ஏற்றதன்று என திரு அண்ணாமலை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கூட்டணியைத் தவிர்க்க இயலாத பட்சத்தில் தாம் மாநிலக் கட்சித் தலைவராகத் தொடர விரும்பவில்லை என்றும் திரு அண்ணாமலை கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சரும் பாஜகவின் தலைமை அரசியல் உத்திபூர்வ செயலாளரான அமித் ஷாவைத் திரு அண்ணாமலை கடந்த வாரம் சந்தித்தார்.
அவரது வருகைக்கு அடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரு ஷாவைச் சந்தித்தார். திரு அண்ணாமலையைக் கட்சியிலிருந்து நீக்க திரு பழனிசாமி கோரிக்கை முன்வைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எந்த முகாந்தரமும் இல்லை என்று ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேட்டியில் மூத்த தலைவர் கூறினார்.