புதுடெல்லி: அனைத்துலக வணிகத்தில் இந்திய ரூபாயின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு முக்கியத் தடை ஒன்றை நீக்கியுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தங்களது வணிகப் பணத்தை இந்திய ரூபாயில் பெற்றாலும், நாட்டின் வெளிநாட்டு வணிகக் கொள்கையின்கீழ் வழக்கம்போல் சலுகைகளைப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு மாற்றான பணப்பரிவர்த்தனையை உருவாக்கும் பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை வெளிவந்துள்ளது.
எனினும், பிரிக்ஸ் நாடுகளுக்கான பொதுவான நாணயத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும், இது டாலருக்கு மாற்றானது அல்ல, இந்திய ரூபாயின் அனைத்துலகப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சி மட்டுமே என்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.
புதிய விதிகளின்படி, நேப்பாளம், பூடான் தவிர்த்து பிற நாடுகளுடனான வணிகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கி வழிகள் மூலம் ரூபாயில் பணம் பெறப்பட்டால், அது வெளிநாட்டு நாணயத்தில் பெறப்பட்ட பணத்திற்குச் சமமாகக் கருதப்பட்டு, வணிகச் சலுகைகள் வழங்கப்படும். ஈரான் போன்ற நாடுகளுக்கான வணிகத்தில் சிறப்புப் பாதுகாப்பு விதிகள் தொடரும்.
டாலர் பற்றாக்குறை உள்ள நாடுகளுடனான வணிகத்திற்கு இத்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாணய மாற்றுக் கட்டணத்தைக் குறைப்பதுடன், அனைத்துலக வணிகப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை முறைப்படுத்தவும் உதவும்.
எனினும், இந்த விதிமுறை மாற்றத்தால் உடனடியாக ரூபாய் வணிகம் பெருமளவில் உயர்ந்துவிடாது. வெளிநாட்டு வங்கிகள், வணிகர்கள் ரூபாயை எளிதாகப் பயன்படுத்தவும் முதலீடு செய்யவும் ஏதுவாக கூடுதல் வசதிகளை இந்தியா ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வணிக வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.


