பெங்களூரு: இந்தியாவில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
அங்கு சாலைகளில் நிறுத்தப்படும் கார்களுக்கு ஆண்டுக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இனி பெங்களூரு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு இனி இருசக்கர வாகனங்கள் , ஆட்டோக்கள் தவிர மற்ற வாகனங்களை சாலைகளில் இலவசமாக நிறுத்த இயலாது.
இதுகுறித்து கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனி அந்நகரச் சாலைகள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். ஏ பிரிவு சாலைகளில் கார்களை நிறுத்த மணிக்கு ரூ.80, பி பிரிவுக்கு ரூ.60, சி பிரிவுக்கு ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது சாலைகளுக்குப் பதிலாக வாகனம் நிறுத்தும் வளாகங்களில் மாதந்தோறும் இரு சக்கர வாகனங்களுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலும், கார்களுக்கு இரண்டாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் விதிக்கப்படும் என்று அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாதம்தோறும் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
பெங்களூரில் காலியாக உள்ள தனநிலங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து பொது வாகன நிறுத்தங்களாக மாற்றினால் அவர்களுக்கு 35 ஆண்டுகள் வரை அந்த இடத்துக்கு சொத்து வரியில் விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக கார் வைத்திருப்போர் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் முன் சிறிய ரக கார்களை நிறுத்த ஆண்டுக்கு ரூ.15,000, செடான் வகை கார்களுக்கு ரூ.20,000, பெரிய ரக கார்களுக்கு ரூ.25,000 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இது வரைவு திட்டம் மட்டுமே என்றும், அடுத்த 30 நாள்களுக்குள் பொது மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


