சென்னை: காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடனமாடிய உதவி ஆய்வாளர்கள், காவலர்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்த உத்தரவு, கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சார்பில், ஜனவரி 13ஆம் தேதி மாடம்பாக்கத்தை அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் காவலர்கள் நடனமாடிய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதைத் தொடர்ந்து அவ்விரு காவல் நிலையங்களின் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர்கள் பழனிவேல், தயாள் ஆகியோரும் ஐந்து உதவி ஆய்வாளர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும், இருபது காவலர்கள் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்தில் நடனமாடிய காரணத்திற்காக பலரும் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்குக் காவல்துறை வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் ஆணையரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக, இரண்டு ஆய்வாளர்களைத் தவிர, மற்ற அனைவரும் சனிக்கிழமை (ஜனவரி 16) பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொண்டாட்டத்தில் நடனமாடிய காவலர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த ஆணையர், அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பொங்கல் கொண்டாடிய அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘சமத்துவப் பொங்கல்’ என முழங்குபவர்களுக்குக் காவலர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களை ஏவலாளிகளாகக் கருதும் ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, இடமாற்றத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்,” என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

