புதுடெல்லி: மத்திய கிழக்கில் சண்டை நீடித்துவரும் நிலையில் இன்னும் கிட்டத்தட்ட 1,000 இந்தியர்கள் ஈரானில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல, வளைகுடா நாடுகளில் உள்ள 23,000 மாணவர்களால் சிபிஎஸ்இ இறுதித் தேர்வை எழுத இயலவில்லை என்று டெக்கான் ஹெரால்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவரங்களை வெளியுறவு அமைச்சு, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் புதன்கிழமை (மார்ச் 18) தெரிவித்தது.
“இன்னும் கிட்டத்தட்ட 1,000 பேர் ஈரானில் இருந்தாலும் அவர்களில் எல்லாருமே அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை,” என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் சசி தரூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் 10, 12ஆம் வகுப்புகளில் பயிலும் இந்திய மாணவர்களால் தற்போது நடைபெறும் சிபிஎஸ்இ இறுதித் தேர்வுகளை எழுத முடியாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
அந்த மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து வெளியுறவு அமைச்சும் கல்வி அமைச்சும் ஆலோசனை செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளைகுடா நாடுகளில் உள்ள புலம்பெயர் இந்தியர்களின் நல்வாழ்வு குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் திரு சசி தரூர் சொன்னார்.
வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
1,000 மாணவர்கள் விரைவில் வெளியேறுவர்
இதற்கிடையே, ஈரானில் கிட்டத்தட்ட 9,000 இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 1,000 பேர் அங்கிருந்து வெளியேற இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிலேயே தங்கியிருக்க முடிவுசெய்துள்ளோரில் பலர் மருத்துவ மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அங்குள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தின்போது, ஈரான் நிலவரம் தொடர்பில் இந்தியாவின் அரசதந்திர நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதை அடுத்து, இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

