புதுடெல்லி: ஆசியாவின் ஆகப்பெரிய பணக்கார குடும்பமான அம்பானியின் தனியார் உயிரியல் பூங்காவில் உலகில் கிடைக்காத அரிய வகை கிளிகள் இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளளது.
ஸ்பிக்ஸ் மக்காவ் என்ற நீல நிறப் பறவையை இனப்பெருக்கம் செய்யும் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் 2019ல் அவை ஏறக்குறைய அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'வந்தாரா' விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் அத்தகைய அரிய வகை கிளிகள் 26 இருப்பதைக் கண்டு மூன்று கண்டங்களில் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்புதான் இந்திய விசாரணை அதிகாரிகள் அந்தத் தனியார் உயிரியல் பூங்காவில் எந்தவிதத் தவறுகளும் இடம்பெறவில்லை என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
ஆனால் வந்தாராவுக்கு எந்தவித உயிரினங்கள் தருவிக்கப்பட்டாலும் அதனை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக ஐரோப்பிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் வனவிலங்கு விற்பனையைக் கண்காணித்து வரும் ஐநா நிர்வாகத்தின்கீழ் உள்ள அமைப்பு இந்த விவகாரத்தில் தீர்வு காண இந்தியாவுடன் ஜெர்மனி சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
குஜராத்தில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வந்தாரா விலங்கு மீட்பு, மறுவாழ்வு நிலையத்தில் ஏறக்குறைய 2,000 உயிரினங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்திய நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது. இதில் இவாங்கா டிரம்ப், மார்க் ஸுக்கர்பெர்க் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பக்கத்தில் வந்தாரா அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த நிலையம், தென் ஆப்பிரிக்கா, வெனிசுவேலா, காங்கோ, ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அரிய வகை உயிரினங்களை இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.