தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்ப்பிணியின் கருவிற்குள் இன்னொரு கரு!

1 mins read
3c9c4307-0f6e-44ef-a82f-8a929c7c08d7
உலகளவில் இதுவரை ஏறத்தாழ 200 பேரிடம் மட்டுமே இத்தகைய நிலை கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் பிரசாத் அகர்வால் கூறினார். - மாதிரிப்படம்: பிக்சாபே

புல்தானா: கருத்தரித்துள்ள 32 வயதுப் பெண்ணின் கருவிற்குள் குறைபாடுள்ள இன்னொரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரிதினும் அரிதானதாகக் கருதப்படும் இத்தகைய நிலை, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது 35 வாரக் கருவுடன் இருக்கும் அப்பெண் சில நாள்களுக்குமுன் புல்தானா மாவட்டப் பெண்கள் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்நூறாயிரம் பெண்களில் ஒருவருக்கே இத்தகைய நிலை ஏற்படும் என்று அம்மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறினார்.

உலகளவில் இதுவரை ஏறத்தாழ 200 பேரிடம் மட்டுமே இத்தகைய நிலை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதுவும் மகப்பேற்றுக்குப் பிறகே தெரியவந்தது என்றும் அவர் சொன்னார்.

அவர்களில் 10-15 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், “அப்பெண்ணின் 35 வாரக் கருவின் வயிற்றுப் பகுதியில் சில எலும்புகளுடன் இன்னொரு கருபோல் தெரிந்ததைக் கண்டேன். உடனே இது வழக்கமானதன்று என்பதையும் ‘கருவிற்குள் கரு’ என்பதையும் உணர்ந்தேன். இருப்பினும், இன்னொரு மருத்துவ வல்லுநரின் கருத்தையும் நாடினோம். கதிரியக்க வல்லுநரான டாக்டர் ஷ்ருதி தோரத்தும் கருவிற்குள் கரு இருப்பதை உறுதிப்படுத்தினார்,” என்று டாக்டர் பிரசாத் விளக்கினார்.

இதனையடுத்து, பாதுகாப்பாகக் குழந்தை பெற்றெடுக்க ஏதுவாக அருகிலுள்ள சத்ரபதி சம்பாஜிநகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அப்பெண் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்