லக்னோ: சுபான்ஷு சுக்லாவைத் தொடர்ந்து, மேலும் ஓர் இந்தியர் விண்வெளிக்குப் பயணமாகிறார்.
ஆக்ராவைச் சேர்ந்த அர்விந்தர் சிங் பஹால் என்ற 80 வயதான அந்த ஆடவர், அடிப்படையில் ஒரு தொழிலதிபர் ஆவார்.
அமேசான் நிறுவனர் நடத்தும் ‘ப்ளூ ஆர்ஜின்’ நிறுவனம் மூலம் அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வசதி படைத்தவர்களை விண்வெளிக்குச் சுற்றுலாவாக அழைத்துச் செல்கிறது இந்த நிறுவனம். இதுவரை 70 பேர் இவ்வாறு விண்வெளிச் சுற்றுலா சென்று திரும்பியுள்ள நிலையில், ஆக்ராவைச் சேர்ந்த அர்விந்தர் சிங் பஹால் உள்ளிட்ட ஆறு பேர் தற்போது விண்வெளிக்குப் பறந்துள்ளனர்.
இது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில் மற்றொரு மைல்கல் என துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபரான அர்விந்தர் சிங், 1945ஆம் ஆண்டு பிறந்தவர். விமானப் பயணத்தில் ஆர்வம் உள்ள அவர், பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் வசித்து வருகிறார். கடந்த 1977ஆம் ஆண்டு ‘கிரீன் கார்ட்’ தகுதியைப் பெற்ற அவர், அமெரிக்காவிலேயே திருமணம் செய்துகொண்டார்.
இரண்டு குழந்தைகளும் நான்கு பேரக்குழந்தைகளும் உள்ள அர்விந்தர் சிங், ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்.
தொடர்புடைய செய்திகள்
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் டார்ஜிலிங் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு.
சாகச ஆர்வலரான அர்விந்தர் சிங், அனைத்துலக நாடுகளுக்கும் பயணம் செய்வதற்கான திட்டத்தை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், வட, தென் துருவ முனைகளுக்குச் செல்வது, எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து ‘ஸ்கைடைவிங் செய்வது’ போன்ற திட்டங்களை வைத்துள்ளார். மேலும் ஹெலிகாப்டர் இயக்கத் தேவைப்படும் விமானி உரிமம் அவரிடம் உள்ளது.
இவருடன், துருக்கிய தொழிலதிபர் கோகன் எர்டெம், புவேர்ட்டோ ரிக்கன் வானிலை ஆய்வாளர் டெபோரா மார்டோரெல், ஸ்பெயினில் வசிக்கும் கொடையாளர் லியோனல் பிட்ச்ஃபோர்ட், முதலீட்டாளர் ஜே.டி. ரஸ்ஸல் ஆகியோர் செல்ல உள்ளனர்.