விமானத்தில் சிறுநீர் கழித்தவர் வேலைநீக்கம்; மற்றொரு சம்பவத்தில் ஆண்-பெண் சமாதானம்

2 mins read
263e2c24-1883-47d2-8e77-a110a8c3ad91
நவம்பர் 26ஆம் தேதி சம்பவத்தில் தேடப்பட்டு வருபவரின் பெயர் ஷங்கர் மிஷ்ரா (படம்) என்றும் 'வெல்ஸ் ஃபார்கோ' என்னும் அமெரிக்க நிதிச் சேவை நிறுவனத்தின் இந்திய கிளை துணைத் தலைவர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. -

நடுவானில் விமானத்தினுள் சக பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

ஏற்கெனவே 2022 நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்-புதுடெல்லி விமானத்தில் ஆடவர் ஒருவர் 70களில் உள்ள பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பாகி உள்ள வேளையில், இரண்டாவது சம்பவம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.

டிசம்பர் 6ஆம் தேதி பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து புதுடெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் கம்பளிப் போர்வை மீது ஆடவர் ஒருவர் சிறுநீர் கழித்துவிட்டார்.

அதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி, இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் எழுத்துபூர்வ புகாரை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆடவரை டெல்லி விமான நிலையத்தின் மத்திய தொழிலியல் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

குடிபோதையில் தவறு செய்துவிட்டதாகவும் தமது செயலுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும் கூறிய அந்த ஆடவர், மன்னிப்பைக் கடிதமாக எழுதித் தந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆடவர் விடுவிக்கப்பட்டார். ஆண், பெண் பயணியர் இருவரும் சமாதானம் அடைந்ததைத் தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்படவில்லை என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் கூறியது.

இதற்கிடையே, நவம்பர் 26ஆம் தேதி சம்பவத்தில் தேடப்பட்டு வருபவரின் பெயர் ஷங்கர் மிஷ்ரா (படம்) என்றும் 'வெல்ஸ் ஃபார்கோ' என்னும் அமெரிக்க நிதிச் சேவை நிறுவனத்தின் இந்திய கிளை துணைத் தலைவர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக 'வெல்ஸ் ஃபார்கோ' நிறுவனம் நேற்று ஒர் அறிக்கை வெளியிட்டது.

"எமது ஊழியர்கள் உயர்தரத்தைக் கடைப்பிடிப்பவர்கள். ஏர் இந்தியா விமானத்தினுள் சிறுநீர் கழித்ததன் மூலம் அவப்பெயருக்கு ஆளாகி இருக்கும் ஷங்கர் மிஷ்ராவை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம்," என்று அதில் அந்நிறுவனம் தெரிவித்தது.

ஷங்கர் மிஷ்ரா மும்பையைச் சேர்ந்தவர் என்றும் அவரைப் பிடிக்க தனிப்படை அனுப்பப்பட்டு உள்ளது என்றும் காவல்துறை தெரிவித்தது.