புதுடெல்லி: இந்தியாவில் ‘நீட்’, ‘யுஜிசி-நெட்’ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்ச்சைகள் நிலவும் நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற நடைமுறைகள் தடுப்புச்) சட்டம் 2024 எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்கப்பட்ட மறுநாள் அது அமல்படுத்தப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சு அதன் தொடர்பில் விதிமுறைகளை வரையறுக்கும் பணிகளை மேற்கொண்டிருந்ததாக அமைச்சர் கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடப்புக்கு வந்துள்ள புதிய சட்டத்தின்கீழ், வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் மாற்றம் செய்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதில் ஈடுபட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். பின்னர் அதை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். மேலும் பத்து லட்சம் ரூபாய் (ஏறக்குறைய 16,217 வெள்ளி) வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்தச் சட்டத்தின்கீழ் நிரூபிக்கப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் பிணையில் வெளிவர இயலாது. இவற்றின் தொடர்பில், சந்தேகத்துக்குரியவரைக் காவல்துறை கைது ஆணை இன்றிக் கைது செய்து விசாரிக்கலாம்.
முறைகேடு நடந்திருப்பதாக அறிந்தும் அதுகுறித்துப் புகாரளிக்கத் தவறிய தேர்வுச் சேவை வழங்கும் அமைப்புக்கு ரூ.1 கோடி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
விசாரணையில், தேர்வுக்கான சேவை வழங்கும் அமைப்பின் மூத்த அதிகாரி குற்றத்தை அனுமதித்ததாகத் தெரியவந்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
தேர்வை நடத்தும் அமைப்போ அதற்கான சேவை வழங்கும் அமைப்போ திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படலாம்
முன்னதாக, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, 1.500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நியாயமற்ற முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது போன்ற முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த புதன்கிழமை, துணைப் பேராசிரியர், இளநிலை ஆய்வாளர் போன்ற பதவிகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் ‘யுஜிசி-நெட்’ தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து அந்தத் தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

