புதுடெல்லி: மோசமான குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முன்பிணை சர்வ சாதாரணமாக வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மெஹ்தா ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் குழு அவ்வாறு சொன்னதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது.
கொலை வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு முன்பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட உத்தரவைத் தள்ளுபடி செய்தபோது அந்த நீதிபதிகள் இதைச் சுட்டினர்.
முன்பிணை வழங்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் பாட்னா நகரக் கிளை, சம்பந்தப்பட்ட வழக்கும் அதில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் எவ்வளவு கடுமையானவை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு எடுத்துரைத்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எட்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில், சந்தேக நபர்கள் நால்வருக்கு முன்பிணை வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகக் கொலை செய்யப்பட்டவரின் மகன் மேல்முறையீடு செய்திருந்தார். அதன் தொடர்பில் நடந்த நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம், மோசமான குற்றங்களில் சந்தேக நபர்களுக்கு எளிதில் முன்பிணை வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது.