சென்னை: நாடு முழுவதும் ஏறத்தாழ ரூ.8,600 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பிரம்மாண்ட விரிவாக்கப் பணிகளுக்கான திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடேலா நியமிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் அறிவித்துள்ளது.
சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனா காமினேனி புதிய மருத்துவமனைகளை அமைத்தல், இயங்கி வரும் மருத்துவமனைகளின் கட்டமைப்பு, வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை திட்டமிட்டு, ஒருங்கிணைப்பார்.
நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை வளாகங்கள் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் வகையில் வடிவமைப்பதில் உபாசனா கவனம் செலுத்துவார். தெளிவான வழிகாட்டிப் பலகைகள், மருத்துவப் பணிகளுக்கான இடவசதி, திட்டப்பணிகளைத் தொடக்கம் முதல் முடிவு வரை திறம்படக் கண்காணிக்கும் முறைகளை வலுப்படுத்துவது அவரது முக்கியப் பொறுப்பாகும்.
ஹைதராபாத், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, லக்னோ, வாரணாசி, இந்தூர், கவுகாத்தி, ராஞ்சி உள்ளிட்ட வளர்ந்து வரும் நகரங்களிலும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த அப்போலோ திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.1,565 கோடி அளவிலான புதிய முதலீட்டுத் திட்டங்களை அப்போலோ அறிவித்துள்ளது.
அப்போலோவின் இந்த மிகப்பெரிய விரிவாக்கத் திட்டம், நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு, நோயாளிகளின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
