திருவனந்தபுரம்: அரசு வேலைக்கான நியமனக் கடிதம் பெறுவது பொதுவாக மகிழ்ச்சி தரும் தருணமாகும்.
ஆனால், கேரள மாநிலம் மலப்புர்த்தைச் சேர்ந்த 60 வயது அப்துல் மஜீத் என்பவருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது ஓய்வுக்காலத்தில் பகுதிநேர அரபு மொழி ஆசிரியர் பணி நியமனக் கடிதம் கிடைத்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு அரசாங்கச் சேவை ஆணையத்தின் தேர்வை அவர் எழுதினார். அவர் இடம்பெற்ற தரவரிசைப் பட்டியல் 2008ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்ட நிலையில், தகுதியான நபர்கள் கிடைக்காமல் நீண்டகாலமாக காலியாக இருந்த ஒரு பணிக்காகத் தற்போது அவருக்கு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
60 வயதைக் கடந்த நிலையில் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணமே தமக்கு இல்லாமல் போய்விட்டது என்றும் இத்தாமதமான கடிதத்தால் தமக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் மிகவும் வேதனையுடன் மஜீத் தெரிவித்தார்.
பள்ளிச் சான்றிதழின்படி,1966ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிறந்த அவர், ஏற்கெனவே ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால், சட்டப்படி அப்பணி நியமனத்திற்கு அவர் தகுதியற்றவராகிறார்.

