தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதியாண்டு இறுதிக்குள் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: நிதின் கட்காரி

1 mins read
162fc582-e446-499a-8c30-f339f742a2d3
அமைச்சர் நிதின் கட்காரி. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்திய அரசாங்கம் இந்த நிதியாண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட மூன்று டிரில்லியன் ரூபாய் (ஏறக்குறைய 46 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான நிதியை வழங்கும் என்று மத்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

அரசாங்கம் நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முதலீடுகளில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்திய அரசாங்கம் அதிவிரைவுப் பாதைகளுக்கான எட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

மொத்தம் 936 கிலோமீட்டர் தொலைவுக்கான அந்தத் திட்டங்கள் ஏறத்தாழ 51,000 கோடி ரூபாய் மதிப்பிலானவை.

அத்துடன், 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேலும் நான்கு பெரிய திட்டங்கள் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றார் அமைச்சர் கட்காரி.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூருக்கும் இடையிலான 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதையும் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஷில்லாங்-சில்சார் பாதையும் அவற்றில் அடங்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடன் சுமை, நிதி ஒதுக்கீட்டை அதிகம் சார்ந்துள்ள போக்கு ஆகியவற்றுக்கு இடையிலும் தற்போதைய, வருங்காலத் திட்டங்களுக்கு நிதி வழங்கப் போதிய வளங்கள் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்