உருவானது ‘அக்வான்’ புயல்: 74 மீட்புப்படைகளைக் களமிறக்கிய ஒடிசா அரசு

உருவானது ‘அக்வான்’ புயல்: 74 மீட்புப்படைகளைக் களமிறக்கிய ஒடிசா அரசு

படம்: என்டிடிவி

17 Nov 2026 - 4:31 pm

2 mins read

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் ஆந்திர மாநிலக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநில அரசு 74 மீட்புப் படைகளைக் களமிறக்கியுள்ளதோடு, தாழ்வான, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த மூன்று வாரங்களில் வங்கக்கடலில் உருவாகும் மூன்றாவது புயலாகும்.

தற்போது ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 790 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல், நவம்பர் 19ஆம் தேதி காலை அதிதீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர், துனி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.

இதன் எதிரொலியாக, ஒடிசா பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

அதையடுத்து, கஞ்சம், கஜபதி, கந்தமால், ராயகடா, கோராபுட், மல்காங்கிரி, புரி ஆகிய மாவட்டங்களில் 60 ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படைகளும் 14 தேசிய பேரிடர் மீட்புப் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கரையைக் கடந்த ‘அர்னாப்’ புயலின்போது ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு, இம்முறை நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கையாக 107 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நவம்பர் 18 முதல் 21 வரை ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கைத் தடுக்க ருஷிகுல்யா, நாகவலி, பஹுடா, வம்சதாரா ஆகிய நதிகளின் குறுக்கே உள்ள அணைகளிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் நவம்பர் 18 முதல் 20 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்