புதுடெல்லி: தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாக்குகளைப் பங்ளாதேஷ் பாக்குகள் எனப் பொய்யாகக் குறிப்பிட்டு, ரூ.2,500 கோடிக்கும் அதிகமாகச் சுங்க வரி மோசடி செய்ததை இந்திய வருவாய் புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
இந்திய நிதியமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) ஒரு செய்தியறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
இந்தோனீசியா தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பாக்குகளைத் திரட்டிய கும்பல், அவற்றைப் பங்ளாதேஷில் உள்ள ஏற்றுமதிப் பொருள்கள் பதப்படுத்தும் மண்டலத்தின் வழியாக அனுப்பியது.
அங்கு அப்பொருள்கள் வேறு கொள்கலன்களில் மாற்றப்பட்டு, பங்ளாதேஷ் பாக்குகள் என்ற பெயரில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன.
இந்தியாவில் பாக்கு இறக்குமதிக்கு 100 விழுக்காடு அடிப்படைச் சுங்க வரி விதிக்கப்படுகிறது. எனினும், தடையற்ற தெற்காசிய வணிக உடன்பாட்டின்படி, பங்ளாதேஷிலிருந்து வரும் தகுதியுடைய பொருள்களுக்கு முழு வரி விலக்கு உண்டு.
இதனைப் பயன்படுத்தி, பங்ளாதேஷ் அதிகாரிகளிடம் போலிச் சான்றிதழ்களைப் பெற்று இந்திய இறக்குமதியாளர்களிடமிருந்து பெருந்தொகையைத் தரகுப் பணமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் கோல்கத்தாவிலும் விசாகப்பட்டினத்திலும் இறக்குமதியாளர்கள், சுங்கத் தரகர்கள் உள்ளிட்டோர்க்குத் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. அச்சோதனைகளின்போது ரூ.75 லட்சம் ரொக்கம், ஆவணங்கள், 160 டன் பாக்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இறக்குமதி மோசடிமூலம் அண்மை ஆண்டுகளில் மட்டும் சுங்க வரி ஏய்ப்பு செய்த வகையில் அரசுக்கு ரூ.2,500 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாக நிதியமைச்சு குறிப்பிட்டது.
இந்த மோசடி தொடர்பில் இதுவரை ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான சட்டவிரோதச் சரக்குகளை விடுவித்த நிறுவனத்திற்கான சுங்கத் தரகர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோத இறக்குமதி அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பை ஏற்படுத்தியதோடு, சந்தை விலையைச் சீர்குலைத்து உள்ளூர் பாக்கு விவசாயிகளையும் வணிகர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.
மோசடி குறித்த விசாரணை தொடர்கிறது.


