தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கூடுதல் கைப்பெட்டிச் சுமைக்குக் கட்டணம்

ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள்மீது ராணுவ அதிகாரி வெறித்தனத்துடன் தாக்குதல்

2 mins read
838ee528-dabe-4f31-8f2c-f8fecefd047e
ராணுவ அதிகாரி நான்கு ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களைக் வெறித்தனமாகத் தாக்கியதில் கடுமையாகக் காயமுற்ற ஊழியர்களில் ஒருவர். - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீநகர்: விமான நிலையத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் ஒன்றில், கூடுதல் கைப்பெட்டிச் சுமைக்குக் கட்டணம் விதிக்கப்படும் எனக் கூறிய ஊழியர்கள்மீது ‘கொலைவெறித் தாக்குதல்’ நடத்தியதாகக் கூறப்படும் ராணுவ அதிகாரி ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதலில், நான்கு ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் முதுகெலும்பு முறிவு உள்ளிட்ட ‘கடுமையான காயங்களுக்கு’ ஆளானதாக விமான நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி, 7 கிலோவுக்குமேல் உள்ள கைப்பெட்டிச் சுமைக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என ஊழியர்கள் கூறியதால் கோபத்தில் அவர்களை மீண்டும் மீண்டும் குத்தி, உதைத்துத் தாக்கியதாகவும் ஓர் ஊழியரைக் கியூ ஸ்டாண்டைக் கொண்டு தாக்கியதாகவும் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்த பின்னரும் அவரை அந்த அதிகாரி தொடர்ந்து உதைத்ததாகவும் ஸ்பைஸ்ஜெட் விவரித்தது.

விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் மத்திய தொழில்றைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகக் கூறிய ராணுவம், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் சிவில் விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தது.

ஜூலை 26ஆம் தேதி டெல்லி செல்லவிருந்த ஒரு பயணியுடன் இந்தச் சம்பவம் நடந்ததாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்தது.

“ஜூலை 26ஆம் தேதி ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் எஸ்ஜி-386 விமானத்தின் போர்டிங் கேட்டில் பயணி ஒருவர் நான்கு ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கினார். இதில் எங்கள் ஊழியர்களுக்குக் கடும் காயங்கள் ஏற்பட்டன,” என்று ஸ்பைஸ்ஜெட் கூறியது.

அதிகாரி இரண்டு கைப்பெட்டிகளைச் சுமந்து சென்றதாகவும் அவற்றின் எடை 16 கிலோ என்றும் இது அனுமதிக்கப்பட்ட 7 கிலோ எடையைவிட ஒருமடங்கிற்குமேல் அதிகம் என்றும் ஸ்பைஸ்ஜெட் சொன்னது. கூடுதல் சுமைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டபோது, அதை அவர் மறுத்ததுடன், போர்டிங் செயல்முறையை முடிக்காமல் வலுக்கட்டாயமாக ஏரோபிரிட்ஜுக்குள் நுழைய முற்பட்டு, பாதுகாப்பு நெறிமுறைகளையும் மீறினார்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் உள்ளூர் காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, விமான நிலையத்தில் பதிவான சம்பவத்தின் கண்காணிப்புக் கருவிக் காட்சிகளையும் ஒப்படைத்துள்ளது.

அந்தப் பயணியைப் ‘பறக்கத் தடை செய்யப்பட்டோர் பட்டியலில்’ சேர்க்கும் நடவடிக்கையையும் ஸ்பைஸ்ஜெட் தொடங்கியுள்ளது. இந்தக் ‘கொலைவெறித் தாக்குதல்’ குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கும் தகவல் தெரிவித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஸ்பைஸ்ஜெட் கோரியுள்ளது.

குறிப்புச் சொற்கள்