போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அறுவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. கைதானவர்களில் ஒருவருக்குக் குற்றப் பின்னணி இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தூர் ராணுவப் பயிற்சித் தளத்தில் பயிற்சி பெற்று வரும் ராணுவ வீரர்கள் தங்களுடைய பெண் தோழிகளுடன் வெளியில் சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென்று, கைத்துப்பாக்கிகள், கத்திகள், தடிகளுடன் ஆயுதம் ஏந்திய எட்டுப் பேர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். பயிற்சி அதிகாரிகள், பெண்களிடம் இருந்த பணத்தையும் பொருள்களையும் கொள்ளையடிக்கும் முன்னர், அவர்களை அடித்து உதைத்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஓர் அதிகாரியையும் ஒரு பெண்ணையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து, மற்ற அதிகாரியையும் ஒரு பெண்ணையும் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்று வர அனுப்பினர்.
பீதியடைந்த அதிகாரி தனது பிரிவுக்குத் திரும்பி, அவரது கட்டளை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாகக் காவல்துறையை அழைத்தார்.
காவல்துறை அதிகாரிகளும் ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது தாக்குதல் நடத்தியவர்கள், வாகனங்கள் வருவதைக் கண்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் புதன்கிழமை (செப்டம்பர் 11) அதிகாலையில் நடந்தது.
தொடர்புடைய செய்திகள்
நால்வரும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிசெய்ததாக, லோகேந்திர சிங் ஹிரோர் என்ற காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டி, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது

