இம்பால்: போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்ததை அடுத்து, மணிப்பூரில் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போராட்டக்காரர்கள், பயங்கரவாத அமைப்பினரின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. தொடர் வன்முறைச் சம்பவங்கள் கலவரத்துக்கு வித்திட்டன. இதுவரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மார்ச் 6ஆம் தேதிக்குள் போராட்டக்காரர்கள் சரணடைய வேண்டும் என்றும் இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் அவர் கெடுவும் நிர்ணயித்தார்.
கெடு முடிவடைந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினர் கடந்த இரு நாள்களாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பிஷ்னுபுர், சுராசந்த்புர், கங்போக்கி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, உள்ளிட்ட பல மாவட்டங்களில் ராணுவம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மணிப்பூர் மாநில காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரும் இணைந்தனர்.
பிஷ்னுபுர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டு தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், சந்தேல் மாவட்டத்தில் கையெறி குண்டுகள் காணப்பட்டதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்போக்கி மாவட்டத்தில் பதுங்கு குழிகள் இருப்பது தெரியவந்ததாகவும் அவை உடனுக்குடன் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் கூறியது.
தேடுதல் வேட்டையில் மொத்தம் 114 ஆயுதங்கள், வெடிபொருள்கள், கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று வட இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

