லக்னோ: வாடிக்கையாளரிடம் கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 90,000 மதிப்புடைய இரண்டு திறன்பேசிகளை விநியோகம் செய்த 30 வயது ஃபிளிப்கார்ட் விநியோக ஊழியருக்கு அதுவே இறுதிப் பயணமானது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் செப்டம்பர் 23ஆம் தேதி திரு பரத் குமார் என்ற அந்த விநியோக ஊழியர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை மடிக்கணினியின் மின்னேற்றி வடம் கொண்டு இரண்டு ஆடவர்கள் கழுத்தை நெரித்ததாகவும் அதன்பின் உடலை விநியோகப் பையில் திணித்து லக்னோவில் உள்ள ஒரு கால்வாயில் போட்டதாகவும் நம்பப்படுகிறது.
“பிளிப்கார்ட் விநியோக முகவர் பரத் குமாரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து தேடுதல் பணி தொடங்கியது. விநியோக ஊழியரின் நடமாட்டம், அவர் கடைசியாகச் சென்ற இடம், விநியோகம் செய்யப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை, செய்யப்படாத பொருள்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் சந்தேகத்தை எழுப்பின,” என்றார் துணைக் காவல்துறை ஆணையர் ஷஷாங்க் சிங்.
அதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், ஆகாஷ் சர்மாவைத் தீவிரமாக விசாரித்தனர். தன் நண்பர் கஜனனோடு சேர்ந்து திரு பரத் குமாரைக் கொன்றதை ஆகாஷ் ஒப்புக்கொண்டதாக திரு ஷஷாங்க் தெரிவித்தார்.
கோரிய பொருள் விநியோகம் செய்யப்படும்போது கட்டணம் செலுத்தும் திட்டம்வழி இரு கைப்பேசிகளை ஆகாஷ் கேட்டிருந்தார். ஆனால், பணம் தராமல் கைப்பேசிகளை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்ற பேராசையால் ஆகாஷும் கஜனனும் விநியோக ஊழியரை வீட்டுக்குள் அழைத்து, பின்னர் மின்னேற்றி வடத்தால் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், திரு பரத் குமாரின் ஃபிளிப்கார்ட் பையினுள் உடலைத் திணித்து கால்வாயில் போட்டுவிட்டனர்.
இதற்கிடையே, சடலத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.