தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்து மிகுந்த சாலையில் படுத்து சடலமாக நடித்தவர் கைது

1 mins read
21ca58be-54c8-45cd-a247-ccb478730ee3
சடலம் என்று முதலில் நம்பிய பொதுமக்கள் அது நடிப்பு என்று தெரிந்ததும் காவல்துறையை அழைத்தனர். - படம்: சமூக ஊடகம்

புதுடெல்லி: சமூக ஊடகவாசிகளைக் கவர, போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சடலமாகப் படுத்து நடித்த ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

‘இன்ஸ்டகிராம் ரீல்’ காணொளிக்காக அவர் அந்த வினோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

வாகனங்கள் அதிகமாக சென்றுகொண்டு இருந்த சாலையின் நடுவே வெள்ளைநிற துணி போர்த்தப்பட்டு, மூக்கில் பஞ்சு வைத்து அடைக்கப்பட்ட நிலையில் படுத்துக் கிடந்த ஆடவரின் அருகே மலர்க்கொத்து ஒன்றும் இருந்ததை காணொளி காட்டியது.

சடலமாக நடிப்பதைப் படம் பிடித்துக்கொண்டு இருந்தபோது பொதுமக்கள் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் செய்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் ஆடவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் 23 வயதான முகேஷ் குமார் என்று அடையாளம் காணப்பட்டார். அவரிடம் விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.

காணொளி வாயிலாக அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்த முயன்ற வாலிபரைக் கைது செய்துள்ளோம் என்று கஸ்கஞ்ச் வட்டார கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராஜேஷ் பார்தி கூறினார்.

‘இன்ஸ்டகிராம் ரீல்ஸ்’ காணொளிகளைப் பதிவிட்டு சமூக ஊடகவாசிகளைக் கவரப் போட்டியிடுவோர் ரயில்கள் முன் விழுந்தும் பள்ளத்தாக்கில் சிக்கியும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆடவரின் சடல நடிப்பு காணொளியைப் பார்த்த பலரும் அது மூடத்தனமான செயல் என்று கூறி கண்டித்தனர்.

குறிப்புச் சொற்கள்