புதுடெல்லி: பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, ரகசியத் தகவல்களை அனுப்பிய ஆயுதத் தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பூர் என்ற இடத்தில் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான ஆயுதத் தொழிற்சாலை உள்ளது.
அங்கு ராணுவத்துக்குத் தேவையான பலவித ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரவீந்திர குமார் என்பவர் பணியாற்றுகிறார்.
இவருக்கு ஃபேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த நேகா சர்மா என்பவர் கடந்தாண்டு வலை விரித்தார். இவர் பாகிஸ்தான் உளவாளி. அவரிடம் வீழ்ந்த ரவீந்திர குமார், நேகா கேட்கும் தகவல்களை எல்லாம் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
அவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆயுத தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி அறிக்கை, ட்ரோன்கள் பரிசோதனை, ஆயுத இருப்புகள், ரகசியக் கடிதங்கள் உட்படப் பல தகவல்களை அனுப்பியுள்ளார்.
உளவுத்துறையின் கண்காணிப்பு கருவிகளில், ரகசியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு அனுப்பும் நபர் ரவீந்திர குமார் என அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து அவர், ஆக்ராவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இதையடுத்து தனது குற்றத்தை ரவீந்திர குமார் ஒப்புக் கொண்டார்.
பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசியத் தகவல்களை அனுப்புகிறோம் எனத் தெரிந்தே ரவீந்திர குமார் இந்தக் குற்றத்தைச் செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

