என்சிஆர் (NCR) எனப்படும் தேசியத் தலைநகர வட்டாரத்தில் காற்றின் தரம் ஆபத்தான அளவுக்கு மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செயற்கை மழைக்கான ஏற்பாடுகளுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
காற்றின் தரம் மோசமடைவதற்கு முன்பு இருந்தே செயற்கை மழை தொடர்பான கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தபோதிலும் அது கண்டுகொள்ளப்படவில்லை என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்து உள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது, செயற்கை மழைக்கான தேவை எழுந்துள்ளது. இது காலத்தின் கட்டாயம். காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் அசுத்தமான பனிப்புகையைப் போக்குவது எப்படி என்று பல்வேறு நிபுணர்களுடனும் ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.
திரு ராய் மேலும் கூறுகையில், “செயற்கை மழையால் அசுத்தப் புகைமூட்டத்தை ஒழித்து மக்களுக்கு நிம்மதி அளிக்கலாம் என்பது எங்கள் கருத்து.
“எனவே, செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
“செயற்கை மழை தொடர்பாக ஆராய்ச்சிகளை நடத்தியுள்ள ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தின் நிபுணர்களுடனும் செயற்கை மழை தொடர்பான துறைகளுடனும் டெல்லி அரசாங்கம் கலந்து பேசும் வகையில் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்,” என்று திரு ராய் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் காற்றுத்தரக் குறியீடு (AQI) திங்கட்கிழமை (நவம்பர் 18) 494 என்னும் ஆபத்தான நிலையை எட்டியது.
அதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்திலும் கட்டுமானப் பணிகளிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிக்கூடங்கள் உடனடியாக மூடப்பட்டு வகுப்புகள் இணையம் வழியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் 492 என்று காற்றின் தரக்குறியீடு பதிவானது.
தேசியத் தலைநகர வட்டாரத்தில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அதற்கு ஒரு தீர்வாக செயற்கை மழையை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.