புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லி உட்பட அங்குள்ள வட்டாரங்களைப் பாதித்துவரும் புகைமூட்டத்தைக் கையாள செயற்கை மழையை உருவாக்கும் முறையைச் சோதனையிட அதன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இனி மேற்கொள்ளப்படவிருக்கும் நீர் சோதனைகள் உள்ளிட்டவற்றின் முடிவுகளைப் பொறுத்து செயற்கை மழைச் சோதனைகள் நடத்தப்படும் என்று என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான திட்டம் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அதற்கான ஆய்வு தற்போது நடந்துவருவதாகவும் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிண்டர் சிங் சர்சா தெரிவித்தார். பிடிஐ ஊடகத்துடன் நடந்த நேர்காணலில் பேசிய அவர், காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்துவருவதாகக் குறிப்பிட்டார்.
நிலவரம் இப்போதே மேம்பட்டிருப்பதைப் பார்க்க முடிவதாகவும் முந்தைய ஆண்டுகளைவிட காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
மாசுபாட்டைக் குறைப்பதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், ஏற்கனவே காணக்கூடிய முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும், முந்தைய ஆண்டுகளை விட சிறந்த காற்றின் தரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
“செயற்கை மழையை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் மனிதர்களின் உடலுக்கோ தோலுக்கோ அபாயகரமான விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்பதை அறிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
“அந்த அறிக்கையின் முடிவுகளைப் பொறுத்து டெல்லி புறநகர்ப் பகுதியில் சிறிய அளவில் சோதனை நடத்துவோம். எவ்வித பின்விளைவும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய (சோதனையின்போது) நீர் சேகரிக்கப்பட்டு ஆராயப்படும். சோதனைகள் வெற்றிகரமாக அமைந்து பின்விளைவுகள் இருக்காது என்பது உறுதியாகத் தெரிந்தால் நாங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்,” என்று திரு மன்ஜிண்டர் சர்சா விவரித்தார்.
டெல்லியின் காற்றுத்தரம், பொதுவாக குளிர்காலத்தின் உச்சத்தில் அதிகளவு மோசமடைவது வழக்கம். அதன் காற்றுத்தரக் குறியீடு (ஏகியூஐ) பல வேளைகளில் 450ஐ தாண்டுவதுண்டு. இந்தியாவில் எகியூஐ குறியீடு ஆக அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் டெல்லியும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான வாகனங்களுக்கு டெல்லி பெட்ரோல் நிலையங்களில் பெட்ரேல் நிரப்ப அனுமதி கிடையாது என்று மன்ஜிண்டர் சர்சா முன்னதாக அறிவித்திருந்தார். விதிமுறையை அமல்படுத்த நவீன தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் நிலையங்களில் தகுந்த கருவிகளைப் பொருத்துவது அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.