புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்றுத் தூய்மைக்கேட்டைக் கையாள செயற்கை மழையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
செயற்கையாக மேகங்ளை மழை பொழிய வைக்கும் முறையைச் (cloud-seeding) சோதனையிடும் பொறுப்பு, ஐஐடி கழகத்தின் கான்பூர் நகரக் கிளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செயற்கை மழை சோதனை குறித்து அடுத்த அமைச்சரவைச் சந்திப்பில் கலந்துபேசப்படும் என்று அறிவிக்கப்பட்ட மறுவாரம் சுற்றுச்சூழல் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (மே 3) இத்தகவலை வெளியிட்டார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இயற்கை முறையில் மேகங்களை மழை பொழிய வைக்கும் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட ரூ 15 மில்லியன் (229,962 வெள்ளி) செலவாகும். பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் அரசாங்கம், நேரடியாக ஐஐடிக்கு அத்தொகையை வழங்கும்.
“அவர்கள் (ஐஐடி-கான்பூர்) ஏற்கெனவே தொழில்நுட்ப செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தால் சோதனை நடத்த அனுமதி தரவேண்டிய 13 பிரிவுகளிடமிருந்து அவை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதற்கான ஆவணங்களை (no objection certificates) வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படும். நிதியை அரசாங்கம் வழங்கும்,” என்று சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரி விவரித்தார். சிவில் விமானத்துறை தலைமை இயக்குநரகம், தற்காப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உள்ளிட்டவை அந்த 13 பிரிவுகளில் அடங்கும்.
முதற்கட்ட சோதனைக்குப் பிறகு அறிவியல் ரீதியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.