புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மகன் ரோகன் ஜேட்லி அவரது தந்தையார் குறித்துக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
2020ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசாங்கம் பண்ணைச் சட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. பின்னர் அவை மீட்டுக்கொள்ளப்பட்டன.
சட்டங்கள் அறிமுகம் கண்டபோது அவற்றை எதிர்த்ததற்காகக் காலஞ்சென்ற திரு அருண் ஜேட்லி தம்மை மிரட்டுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டதாய்த் திரு ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அரசாங்கத்தின் பண்ணைச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்று மறைந்த முன்னாள் அமைச்சர் தம்மை அச்சுறுத்தியதாகத் திரு ராகுல் சொன்னார்.
அப்போது “நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். நாங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். கோழைகள் அல்லர். நாங்கள் ஒருபோதும் வளைந்து கொடுக்கமாட்டோம். பிரிட்டிஷாரால்கூட அது முடியவில்லை,” என்று தெரிவித்ததாகத் திரு ராகுல் குறிப்பிட்டார்.
ஆனால் திரு ராகுல் உண்மையைத் திரித்துச் சொல்வதாகக் கூறினார் திரு ரோகன் ஜேட்லி. காலமான ஒருவரின் நினைவலைகளை அரசியலாக்குவதாகத் திரு ராகுலை அவர் சாடினார்.
“எனது தந்தையார் மறைந்தது 2019ஆம் ஆண்டில். ஆனால் பண்ணைச் சட்டங்கள் அறிமுகம் கண்டதோ 2020ல்,” என்று திரு ரோகன் கூறினார்.
தமது தந்தையார் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும் எவரையும் மிரட்டுபவர் அல்லர் என்றும் உறுதியான ஜனநாயகவாதி என்றும் அவர் சொன்னார். ஒருமித்த கருத்தை எட்டுவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் தமது தந்தையாரை நினைவுகூர்ந்தார் திரு ரோகன்.
தொடர்புடைய செய்திகள்
காலஞ்சென்ற அரசியல் தலைவர்களைப் பற்றிப் பேசும்போது திரு ராகுல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பும் இத்தகைய ஒரு சம்பவம் நடந்ததாகத் திரு ரோகன் சொன்னார். முன்னாள் தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரின் இறுதி நாள்களைப் பற்றித் திரு ராகுல் தவறாய்ப் பேசியிருந்ததாக அவர் கூறினார்.
“காலஞ்சென்றவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் அமைதியாக உறங்கட்டும்,” என்றார் திரு ரோகன். கோவாவின் முன்னாள் முதல்வருமான திரு மனோகர் பரிக்கர் 2019ஆம் ஆண்டு காலமானார்.

