தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

35 நாள்களில் கெஜ்ரிவால் மீது மூன்றாவது தாக்குதல்: ஆம் ஆத்மி

1 mins read
1ae9a9ab-7132-4d2a-9217-0ff797fee994
தம் மீது வீசப்பட்ட திரவத்தைத் துடைத்த அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: சமூக ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்த முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

டெல்லியின் தென்பகுதியில் உள்ள மால்வியா நகரில் சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகல் அச்சம்பவம் நிகழ்ந்தது.

பாதயாத்திரையில் ஊடுருவிய மர்ம நபர் ஒருவர், திரவம் ஒன்றை கெஜ்ரிவால் மீது வீசியதாகவும் அந்த நபரை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிடித்துவிட்டதாகவும் காவல்துறை கூறியது.

என்ன திரவம் என்றும் அவர் எதற்காகத் தாக்குதல் நடத்தினார் என்பதும் விசாரிக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது.

சம்பவம் நிகழ்ந்ததும் கெஜ்ரிவால் தமது முகத்தைத் துடைப்பது காணொளியில் இடம்பெற்றது. திரவம் வீசப்பட்டதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றி உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

அந்தச் சம்பவத்தை விமர்சித்த ஆம் ஆத்மி, “நாட்டின் தலைநகரில் முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், சாதாரண மனிதனின் கதி என்ன,” என்று வினவியது.

மேலும், கடந்த 35 நாள்களில் கெஜ்ரிவால் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்றது அக்கட்சி.

கெஜ்ரிவாலைக் கொலை செய்யும் முயற்சியாக இந்தச் சம்பவம் அரங்கேறியதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் பாஜகவுடன் தொடர்புடையவர் என்றும் டெல்லி அமைச்சர் பரத்வாஜ் கூறினார்.

டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்