தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியக் கிண்ண கிரிக்கெட்: 41 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா-பாகிஸ்தான்

2 mins read
09c569c6-6f34-4a46-8ee3-ba19ea10f206
இந்தியா, பாகிஸ்தான் மோதவிருக்கும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். - படம்: ராய்ட்டரஸ்

துபாய்: ஆசியக் கிண்ண ‘டி20’ கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இரு அணிகளும் ஆசியக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறை. எனவே ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கடந்த 41 ஆண்டுகளில் 17 ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. எனினும், இம்முறைதான் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

ஆசியக் கிண்ண ‘டி20’ கிரிக்கெட் போட்டியில் இம்முறை எட்டு அணிகள் பங்கேற்றன. இவை, ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.

இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்குத் தகுதி பெற்றன. ‘சூப்பர்-4’ சுற்றிலும் பாகிஸ்தான் அணியை இந்தியா இரண்டாவது முறையாக வீழ்த்தியது. இதன் மூலம் இறுதி ஆட்டத்துக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

மீதமிருந்த பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய மூன்று அணிகளில் இறுதிப்போட்டிக்குத் தேர்வு பெறும் அணி எது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, களமிறங்கிய பங்ளாதேஷ் அணி எளிதில் வெற்றி பெறும் என அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சில் பங்ளாதேஷ் பந்தடிப்பாளர்கள் திணறிப்போயினர்.

வெற்றி பெறத் தேவைப்பட்ட 136 ஓட்டங்களை எடுக்க முடியாமல் தடுமாறிய பங்ளாதேஷ், கடைசியில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்விகண்டது.

11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

குறிப்புச் சொற்கள்