புதுடெல்லி: டெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அனைத்துலக விமான நிலையமாக ‘ஜேவரில்’ விமான நிலையம் அமைய இருக்கிறது.
இதற்கான ஒப்பந்தத்தை பிராங்க்பர்ட் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள நகரங்களின் தொழில் வளர்ச்சி அமைப்பான ‘ரைன் மெயின் இன்னவேஷன்’ அமைப்பு, தமிழர்களின், ஜெர்மன் - இந்தியன் வர்த்தகக் கூட்டணி (ஜிஐபிஏ) ஆகியவற்றுடன் உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி சரக்கு விமானம், விநியோகச் சங்கிலித் தீர்வுகள், இயந்திரப் பொறியியல், விமான நிலைய தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது.
புதிய விமான நிலையம் ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக விளங்கும், இந்த விமான நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு ஏழு கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
அத்துடன், விமான நிலையத்தைச் சுற்றி தொழில்துறை, தளவாடங்களை மையமாகக்கொண்ட மையங்களும் உருவாக்கப்படும்.
விமான நிலையம், தொழில்துறை மையங்களை பிராங்க்பர்ட் விமான நிலையத்துடனும் அதன் தொழில்துறை மையங்களுடனும் ஒருங்கிணைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

