தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசாம்: குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கையில் 416 பேர் கைது

2 mins read
50e1cecc-cb79-462f-a6e2-8727248d1dbb
இந்தியாவில் சட்டபூர்வ திருமண வயது 18 என்றாலும் மில்லியன்கணக்கான குழந்தைகள் இளம் வயதிலேயே கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  - படம்: அன்ஸ்பிளாஷ்

கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழிக்கும் நோக்கில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 416 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் டிசம்பர் 21ஆம் தேதி இரவு தொடங்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) அவர் சொன்னார்.

காவல்துறை 335 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய முதல்வர், கைது செய்யப்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படுவர் எனக் கூறினார்.

இந்தச் சமூகக் கொடுஞ்செயலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான துணிச்சலான நடவடிக்கைகள் தொடரும் என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் அக்டோபரிலும் இரு கட்டங்களாகக் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கைகளை அசாம் அரசாங்கம் மேற்கொண்டது.

முதல் கட்ட நடவடிக்கையில் 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 915 பேர் கைது செய்யப்பட்டனர். 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அண்மைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டோரையும் சேர்த்து அசாமில் இதுவரை மொத்தம் ஏறக்குறைய 5,000 பேர் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கையில் பிடிபட்டுள்ளனர்.

இந்தியாவில் சட்டபூர்வ திருமண வயது 18 என்றாலும் மில்லியன்கணக்கான குழந்தைகள் இளம் வயதிலேயே கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழைகள் அதிகம் வாழும் கிராமப்புறங்களில் இத்தகைய போக்கு நிலவுகிறது.

இதனால் சிறுமிகள் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு இல்லறத்தில் அடியெடுத்து வைக்க நேரிடுகிறது. அவர்கள் இளம் வயதிலேயே பிள்ளை பெறுவதால் உடல்நலச் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், தாம் அசாமின் முதல்வராகப் பதவி வகிக்கும்வரை, மாநிலத்தில் குழந்தைத் திருமணம் நடக்க அனுமதிக்கப் போவதில்லை என்று திரு சர்மா உறுதி கூறினார்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் 1935ஐ அகற்ற அசாம் அரசாங்கம் முடிவெடுத்ததன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குறைகூறின. குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும் என்று அவை கூறின.

அதை நிராகரித்த முதல்வர் சர்மா, “முஸ்லிம் சிறுவர், சிறுமியரின் வாழ்வில் யாரும் விளையாட அனுமதிக்க முடியாது. 2026ஆம் ஆண்டுக்குள் இதை நிறுத்துவேன்,” என்று சூளுரைத்தார்.

இந்திய உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு, சட்டபூர்வமாகத் திருமண வயதை எட்டாத மனைவியுடன் கொள்ளும் பாலியல் உறவு பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்தியாவில் 220 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகளுக்குத் திருமணம் நடந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் இந்த நூற்றாண்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்