அசாம் தேர்தல்: 8% பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்

அசாம் தேர்தல்: 8% பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்

1 mins read
b183dfa7-decb-406d-ab88-5b779352e786
அசாமில் மொத்தம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 126. - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

கௌஹாத்தி: அசாம் சட்டமன்றத் தேர்தலில் 59 பெண் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இது இம்முறை போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கையில் எட்டு விழுக்காடாகும்.

அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாம் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 126.

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், களத்தில் உள்ள வேட்பாளர்களில் 663 பேர் ஆண்கள் என்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை என்றும் அசாம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், சுயேச்சையாகப் போட்டியிடுவோர் எண்ணிக்கை 258 ஆகும்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையைவிட, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது.

அதற்குத் தலைமை வகிக்கும் பாஜக 90 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

அவை தவிர, திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 18 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளிலும் இந்திய ஃபார்வர்டு பிளாக் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்