கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இருக்கும் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பகுதியின் ஐந்து மாவட்டங்கள் ஆகியவற்றைத் தவிர பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகப் பணிகளில் அசாமி மொழியைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக அசாம் மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் அஜய் திவாரி வெளியிட்ட அறிக்கையில், “பராக் பள்ளத்தாக்கின் கச்சாா், ஹைலாகண்டி, ஸ்ரீபூமி ஆகிய 3 மாவட்டங்களில் அரசு அலுவலகப் பணிகளுக்கு ஆங்கிலத்துடன் கூடுதலாக வங்க மொழி பயன்படுத்தப்படும்,”எனக் கூறினார்.
“இதேபோல், போடோலாந்து வட்டாரத்தின்கீழ் உள்ள கோக்ரஜாா், சிராங், பக்சா, உடல்கிரி, தமுல்பூா் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆங்கிலத்துடன் கூடுதலாக போடோ மொழி பயன்படுத்தப்படும். மற்ற மாவட்டங்களில் அசாமி மொழி கட்டாயமாக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
“அதேவேளையில், மாநில அரசின் அனைத்து அறிக்கைகள், அலுவலகக் குறிப்புகள், சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள், திட்ட வழிகாட்டுதல்கள், இடமாற்றம், பணி நியமன உத்தரவுகள் ஆகியவை ஆங்கிலம், அசாமி ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படும்,” எனக் கூறினார்.

